கடவுள் மனிதன்

 என்னுள் தீராமல் குறையாமல் குவிந்துக்கிடக்கும் இந்த வலிகள், குறைகள் இன்னொருவர் கடத்தியதே அல்ல இன்னொருவரால் கிடைத்ததே.

மண்டியிட்டு உன்னிடம் வேண்டிக்கொண்டால் மனம் மாறிவிடும் என்றதும் அந்த இன்னொருவர் சொன்னது தான்.



மண்டியுமிட்டேன், எதர்க்காகவோ மன்னிப்பும் கேட்டேன்

என்னை தேற்றிக்கொள்ள ஒரு உடலோ, உயிரோ தேடி அலுத்துப்போனேன்.

பற்றிக்கொள்ள நீர் கரம் நீட்டுவதாய் நினைத்துக் கொண்டேன்.

சிந்தும் கண்ணீர் குறையபோகிறது என்று சிரித்தும் கொண்டேன்.

இருந்து வலிகள், வடுக்கள் மெல்ல மறந்து மனமும் தெளிய ஆரம்பித்த தொடக்கத்திலே, ஒரு புது ஏக்கம், புது ஆசை இந்த உடற்மீது போர்வையாகிப்போனது.



இம்முறை, யாரிடமும் சொல்லாமல் இரவோடு அழுகின்றேன்.

கிடைத்த வலிகளை வைத்து உனதருகினில் என்னை நிறுத்தி பார்க்கின்றேன்.

உம்மை போல சிலுவையில் ஏறவோ, மூன்றாம் நாள் உயிர்த்தெழவோ எனக்கு விருப்பமில்லை.

ஏனென்றால், உனது பக்கத்தில் சிலுவையில் ஏற்றிய அந்த இருவர்களில் ஒருவர் என்னை போன்றவரே!

உன்னை நேசித்த அளவிற்க்கு அவர்களை நிராகரித்தவர்கள் தான் இந்த உலகத்து மக்கள்.



நான் நிராகரிப்பால், மீண்டும் உடையவோ நொருங்கவோ விரும்பவில்லை.

மீண்டும் உன்னிடமே மண்டியிடுகின்றேன் துளையிட்ட உன் கரங்களால் என்னையும் அணைத்துக்கொள்.

என் சிறகுகள் வளரும் வரை என்னை நுட்பமாகவும் பார்த்துக்கொள்.

எதற்க்கோ, இங்கிருந்து தொலைய துடித்தவன் தான் நான். இன்று, தொலையாமல் தொலைந்தும் கொண்டிருக்கின்றேன்.

இதோ, நான் செல்லும் இந்த வழி எனக்கு முன்னிருப்பவன் சென்றதே, அவன் அவனுக்கு முன் சென்றவனின் வழியில் சென்றவனே.

உன் சுவடுகளால் தொடங்கிய இந்த பாதை, இந்த மனிதர்களால் மட்டுமே மாறியது அல்ல இந்த மனிதர்கள் தான் மாற்றியது.


வன்னம் இரண்டு, வர்ணம் நான்கு எனவும் பிரித்தும் வைத்தார்கள். அவர்களுக்கு ஏற்றார்போல வசதிகளையும், விதிகளையும் திருத்தியும், பிரித்தும் கொண்டார்கள்.

மொழி, கடன், பினி என உருவாக்கி வாழ்க்கையை ரசிக்கவும் மறந்தார்கள்.

வந்தவர்கள், போனவர்கள் எல்லாம் இறக்க, நீ படைத்த உலகில் நீ தொகுத்த பாரத்தோடு ஒரு வழியை எதிர்ப்பார்த்து தொலைந்த இடத்திலே நிற்க்கின்றேன்.

என் துயரம் பெரிதா என சொல்லத்தெரியவில்லை,

போரில், பஞ்சத்தில் இறந்த உயிர்கள் உன்னிடம் வந்ததா எனவும் கவலைக்கொள்ளவில்லை.

ஆனால், சுயநலமாக எனது குறைகள் தீர, நிறைகள் அடைய இரவல் கேட்டோ, பொருள் தானமிட்டோ பெருமிதம் கொள்கின்றேன்.

ஒரு கட்டத்தில், என் இருப்பின் தேவையை அறிந்துக்கொள்ள இந்த பிறவியை சாபமிட்டேன்.


என் உயிரணுக்களால் இன்னோர் உயிரையும் இந்த உலகிற்கு அழைத்து வந்தேன்.

முழு இன்பம் கொடுக்க நினைத்து அந்த உயிரையும் எனது பாதையில் இழுத்து வந்தேன்.

அந்த உயிரின் துயரம் கடல்போல், மலைப்போல் பெரிதாகிப்போனதும், எனது தேவைகள், குறைகள், ஆசைகள், ஏக்கங்கள் அனைத்தும் குறைந்து சிறுதாகிப்போனது.

இதோ, அன்று நீர் அணைத்துக்கொண்ட பிறகு, என் சிறகுகளும் மெல்ல முளைத்திருந்தது.

என் வயதும் ஒரு கண்சிமிட்டல் போல சட்டென முடிந்துவிட்டது.



என் எல்லா துயரமும் தீர்ந்துப்போன பின்பு,

நான் மெல்ல பறக்க நினைக்கின்றேன் ஒரு வான் தேவைதையைப்போல.

இந்த உடலை மட்டும் இங்கு விட்டுவிட்டு எல்லையற்ற தூரத்திலிருக்கும் உன்னிடம் வந்துவிடுகின்றேன்,

உனது ஒளியில் உண்மையை கான,

உனது நிழலில் என்னையும் தேட,

கடைசியாக நீர் என்னை அணைத்துக் கொள்வதற்க்கு முன்,

முத்தமிட்டு, மண்டியிட்டு வேண்டிக்கொள்கின்றேன்

இன்னும் ஒருமுறை இந்த பிறவி எடுத்திட வேண்டாமென்று!


0 thoughts on “கடவுள் மனிதன்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top