மீனும் அப்பமும் போல பங்கிட்டு பக்குவமாய் பகிர்ந்தளிக்கும் அன்பிற்க்கே திக்குமுக்கு ஆடிப்போகிறேன். மொத்தமாய் தினித்து திணறடித்து விடாதே.
கடற்மணலை அள்ளி நிரப்பிக்கொள்ள நம் இருவரின் கைகளும் போதவே போதாது என இருவருக்கும் தெரிந்த உன்மை தானே, இருந்தும்
சிறிய சட்டைப்பையில் மொத்தமாய் நிரப்பிவிட
எதற்கு இந்த துடிப்புகள்.
தானாய் நெருங்கி, தானாய் நொருங்கும் இந்த உணர்ச்சிகளை சொல்லிக்கொள்ள நம் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருக்கும் இந்த மௌனம் போதுமானதே.
சொற்கள் எப்போதும் போல விரலிடுக்கிலோ, விரல்பிடிப்பிலோ நடுக்கமாய் வியர்வையாய் வந்து வழிந்துக் கொள்ளட்டும்.
எந்த பொய்யையும், உன்மையும் சொல்லி
எந்த புள்ளியிலும் இதை நிறுத்திவிட வேண்டாம். இதை எந்த மையத்திலும் வைத்து வட்டமிட்டு வண்ணமிட வேண்டாம். எந்த கோடுகளையும் கிழித்து இதற்கு எந்த பெயரும் சூட்ட வேண்டாம்.
யாரும் விளையாடிராத விதிகளுக்கு அப்பாற்பட்ட உணர்வுகளின் சதுரங்க ஆட்டத்தில் நீ ராணியாகவே இருந்துக்கொள், நான் ஏதோவாகவே இருந்துவிட்டு போகிறேன்.
இருவரின் விழிகளை இருவரும் சந்திக்கும்போது
அணைப்பிலோ, முத்தத்திலோ, விரல் பிடிப்பிலோ, தலை கோதலிலோ, மௌனத்திலோ அல்ல விலகி இருப்பதிலோ முடியாத ஆட்டத்தை மீண்டும்
தொடங்குவோம்.
மீண்டுமொரு முறை உடைந்து போக!