இருவரும் என்றுமே இந்த பிரிவுகளை பற்றி பேசியதே இல்லை. இருவருக்கும் இடையே இத்தனை கடல், இத்தனை மலை சடாரென முலைத்துவிடும் என்பதையும் எதிர்பார்த்திருக்கவில்லை.
இணையாத விரல்களும், இமைக்காத கண்களும் தவிர்த்து எப்பொழுதும் போல எல்லாமும் அப்படியே தான் இருந்தது மாலையும், இருளும், நிலவும் என எல்லாமும் தான்.
எனக்குள் இருக்கும் உன்னையோ, உனக்குள் இருக்கும் என்னையோ தவிர, எல்லாமும் எல்லாவற்றையும் கலைத்து, கரைத்து, கொஞ்சம் புதிர்போட்டு புரட்டி புன்னகைக்கவும் வைத்தது என்றுமே வேண்டிராத இந்த பிரிவு.
இனி எந்த பகலில், எந்த இரவில், எந்த நிலத்தில் சந்திப்போமென தெரியவில்லை பிரிவதற்கு முன்பு, எப்படியேனும் என்னுள் பதிய வைத்துக் கொள்கின்றேன் நான் ரசித்த உன் முகத்தை.
கடைசியாக மீண்டும் ஒரே ஒருமுறை மட்டும் முகம் காட்டு என் செந்தாழினியே!
பிறகு பார்த்துக்கொள்ளலாம் கண்ணீர் சிந்துவது, காத்திருப்பது, காதல் செய்வதெல்லாம்.