எல்லா பொழுதுகளை போல இல்லை
அந்த இரவு. சரியாக சொன்னால்,
இதுவரை கழிந்த எந்த இரவும் அதுபோல
இருந்ததில்லை. முன் எப்போதும் விட
அப்போது இருவருக்குமே தெரியாமல் ஏதோ
ஒரு சொல்லில், பகிர்ந்துக் கொண்ட
ஏதோ ஒரு நிகழ்வில் நெருக்கமாகி
விட்டிருந்தோம்.
அன்று நமக்குள் இருக்கும் நம்மை
சொற்களின் வழியே பார்த்துக் கொண்டதில்
அத்தனை மகிழ்ச்சி நமக்கு. கனவுகள்
சிதைந்த கட்டிடத்துள் நுழைந்த மின்மினிகள்
இத்தனை வெளிச்சம் தரும் என இருவரும்.
எதிர்பார்த்திருக்கவில்லை.
உணர்ச்சிகளால் தத்தளித்து மூழ்காமல்,
ஆசைகளை அடக்கி, ஏக்கங்களை திருப்பி
வார்த்தைகளை விழுங்கி, ஏமாற்றங்களோடு
அழுது தேம்ப இன்னும் கடவுளின் சாயல்
கொண்ட தேவதைகள் இல்லை நாம்.
அதீத புதிரோடு, அதிக பசியோடு ஆயிரம்
புகார்கள் நிறைந்த கனவுகள் கொண்ட
சாத்தான் ருசிக்க நினைத்த பகிரப்பட்ட
கிண்ணத்தில் வழியும் மெசியாவின் இரத்தம் நாம்.
இனியும் அச்சம் கொள்ள தேவையில்லை.
வா, கிழித்து வைத்த எல்லா
எல்லைகளையும் வாழ்வதற்காக
மீறிக்கொள்வோம். மடித்து வைத்த
இரு சிறகினை வானில் விரித்து
தூரசெல்வோம்.
யாரேனும் அதை தவறென பழித்தால்,
அது தவறாகவே இருந்துக் கொள்ளட்டும்.
அப்படி ஒரு துளி மழையில் உலகம் என்ன
மூழ்கி விடவா போகிறது?
ஆதலால் வா அன்பே,
வாழத் துவங்கலாம்!