தனிமையின் பிணியிலிருந்து
எப்படி என் பக்கமாக உன்னை
இழுப்பதென தெரியவில்லை அன்பே.
கரம் நீட்டி கட்டிக்கொள்ளவும்,
காதுகளின் ஓரம் முத்தமிடவும்
கண்ணீர் துடைத்து கண்ணம் தழுவவும்
புலப்படாத கடலை தாண்டி பறந்து வர
வழியும் தெரியவில்லை.
உறக்கமற்ற பல பொழுதுகளில் நம்
விரல்கள் இணைவதையும், வெப்பம்
உணர்வதையும், இதழ்கள் வருடுவதையும்
நினைத்தபடியே தனிமையின் மடியில் தலை வைத்து கண்விழித்து கிடக்கின்றேன்.
எங்கெங்கோ திரிந்தும், எல்லாமே இருந்தும்,
நான் உன்னையும், நீ என்னையும்
நினைத்து உருகும் பொழுதுகளை
விளக்க எந்த மொழியிலும் எந்த
சொற்களும் இல்லை அன்பே.
இந்த தனிமை அதுவாகவே தகித்து
அடங்கட்டும், எதையாவது நினைத்து
கண்ணீர் வடிக்கும் முன்
எப்பொழுதும் போல, அருகில் இருப்பதாக
விரலை அழுத்துவதாக, ஸ்பரிசம் அணைப்பதாக கண் மூடி கற்பனையில்
நீந்த துவங்குவோம் வா.
தற்சமயம் காற்றில் பறக்க,
கைகளை விரிப்பதில் அப்படி
ஒன்றும் தவறாகிவிடாது அன்பே!
வா பறக்கலாம்!!