அன்பே,
இந்த பிரபஞ்சம் அந்த ஒரு இரவில் நம்இருவரின் சுவாரசியமான பேச்சுகளின் வழியாக நம்மை நம்மிடம் தந்துவிட வழி செய்து கொண்டிருந்தது. அது காதலுக்கும் காமத்திற்கும் இடையே ஓர் மெல்லிய இழையில் நம்மை நிறுத்தி நம்மை சோதனைக்கு உட்படுத்தியது.
அந்த மெல்லிய இழையில் நம்மை நாம் பின்னிக் கொள்ள துவங்கினோம். சொற்கள் முழுவதுமாக தீர்ந்தபிறகும் கரைந்து வழிந்தோடிய நமது உணர்வுகளை அள்ளி பூசிக் கொள்ள துடித்திருந்தோம்.
பரிமாறிக் கொண்ட முத்தங்கள் சுவையில்லாமல் ஈரமில்லாமல் சத்தங்களால் நம்மை கிளர்ச்சிக்கு உள்ளாகியது. ஏதேதோ ஆகிவிட்டதை போல நம் உடல் படுக்கையில் புரண்டு தகித்து எரிந்தது.
முன்பிருந்த வடுக்கள் இருந்த தடமில்லாமல் ஆகிப்போயிருந்தது. முன்பு போல் அதை ரகசியமாய் தொட்டு பார்த்தபோதும் எந்த நினைவும் புத்திக்கு எட்டாமல் அது எங்கோ பறந்து போயிருந்தது.
கடிகாரத்தின் நிகழ்கால சுழற்சியில் சிக்கிய நம் உடல்களை நாம் மெல்ல மெல்ல உணர ஆரம்பித்திருந்தோம். பெயர் தெரியா உணர்ச்சிகளை சேர்த்து மகிழ்ச்சி எனவும் பெயர் சூட்டி மகிழ்ந்திருந்தோம்.
இப்பொழுது ஒரு புல்லியில் நின்று சிறு கோடுகளால் விலகி நிற்கும் நாம் சிறிது காலம் காத்திருப்போம். இணைவதற்கும், இளைப்பாறுவதற்கும், இன்பமுறுவதற்கும். அதுவரை நான் நானாகவும் நீ நீயாகவும் இருப்பதைப்போல அது அது அப்படியே இருந்துக்கொள்ளட்டும்.
காத்திருப்பதனால் கண்களில் வழியே ரத்தம் வழிவதை தவிர வேறொன்றும் ஆகிவிடாது அல்லவா?
நான் சொல்வது சரி தானே அன்பே?