உங்கள் எல்லா இன்பத்தையும், எல்லா சிரிப்பையும், எல்லா துன்பத்தையும், ஆசைகளையும், தாபங்களையும், மோகங்களையும் இன்னும் உங்களை சமநிலையாக இருக்க வைக்கும் எந்த உணர்ச்சிகளாய் இருந்தாலும் அல்ல அது எதுவானாலும் எந்த ஒரு நபர் மீதும் வைக்காதீர்கள். அந்த ஒரு நபரின் சிறு நகர்வு, அல்ல அந்த நபரால் ஏற்படும் ஒரு சிறு நிகழ்வு உங்களை குத்தி கிழிக்கும், உருக்குலைத்து சமநிலையை உடைக்கும். இதுவரை மறந்திருந்ததாக நினைக்கும் அத்தனை நிகழ்வுகளை கிளறி சிரிக்கும். ஆறிய வடுக்களின் மேல் சிறு வலியை தரும்.
நீங்கள் பார்த்து பழகிய உங்கள் கண்ணாடியில், மறந்த உங்கள் பழைய முகம் தெரியும். ஒரு இரவில் உறக்கமில்லாமல், உணவு பிடிக்காமல், உங்கள் ஒரு பாதியை புதைக்க காத்திருந்த தருணத்தை சட்டென நினைவூட்டும். நீங்கள் போதுமென மெத்தையில் புரள்கையில், இளஞ்சூடான நீர் உங்கள் தாடையின் வழி வழிந்து காதிடம் சென்றிருக்கும். உங்கள் அனுமதியின்றி உங்களுள் முளைத்திருந்த சிறகு முறிந்திருக்கும்.


நீங்கள் யாசித்த எந்த விரலும் நிஜமாகவே உங்களுக்கானதல்ல. உங்களை பறக்க வைத்த எந்த சொற்களும் உங்களுடையதல்ல. உங்களை மறக்க வைத்த எந்த நேரமும் உண்மையானதல்ல. உங்கள் பக்கம் நின்ற எந்த உயிரும் நிஜ உயிரல்ல. அது பிரபஞ்சத்தின் சதி. காலத்தின் பெரும் குளறுபடி. 
இந்த வாழ்வின் விடையை அறிந்த நீங்கள் வினாவை மறந்து தான் போனீர்கள். யாரிடமோ என்றோ கேட்க நினைத்த மன்னிப்பை இன்று கேட்க துடித்தீர்கள். உங்களுக்கானது எதுவென எண்ண துவங்கி, எண்ண எதுவும் இல்லாமல் கோபம் கொண்டீர்கள். பின், ஒரு விரல் தாண்டி, அந்த ஒரு நபர் தாண்டி உங்களிடம் இருந்தது மௌனமும், காதலும், நேரமும் மட்டும் தான்.
எதையும் இழக்க மனமில்லாமல், முடிந்த எதையும் மறக்க முடியாமல், நீங்கள் அமைதியாகுவீர்கள். எல்லாவற்றையும் மறைத்து வைத்து, சிடுத்த முகத்தின் மேல் சிரிப்பை மாட்டுவீர்கள். சில நேரம் பிதற்றி முடித்து முக்தி அடைவீர்கள்.
இவ்வளவுக்கு பிறகும் ஒரு புலராத காலையில், சட்டென விழித்து உங்களுக்கு இன்னும் காலம் உண்டு, காதல் உண்டென்று சொல்லி உறக்கத்தை வேண்டுவீர்கள்.
இப்படித்தான் நீங்களும் உங்கள் அகமும் உயிருடன் இருக்கிறீர்கள்.
Scroll to Top