“யாரொருவரின் இன்மையையும்
என் வாழ்நாளில் இந்தளவுக்கு
உணர்ந்ததில்லை” என்ற குறுஞ்செய்தியை
நான் எழுவதற்கு மூன்று மணி நேரம் முன்பு
அனுப்பி இருந்தாள்.
கடந்திருந்த அந்த மூன்று மணி நேரம்
ஏனோ அத்தனை கனமாக ஆகிபோயிருந்தது.
தலைக்கு மேல் உதித்திருந்த சூரியனும்
என்றைக்கும் இல்லாமல் சுட்டெரிக்க துவங்கியது.
பதில் செய்தியும் உறங்கி போயிருந்தவளை
அணைத்துக் கொள்ள அவளருகிலே காத்திருந்தது.
இந்த காலை பிராத்தனையின் பலனாக
இந்த நாளின் அந்த மூன்று மணி
நேரம் முன்பு போய்விட வேண்டும்.
அப்பொழுது நுறை பொங்கி அலையடித்த
கடலினுள் அப்படியே மூழ்கிவிட வேண்டும்.
சிறு தனிமையில் கரம் நீட்டிருந்தவளை
அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும்.
நின்றிருந்த மழைக்கு இப்போது குடை
விரிப்பது அபத்தம் தான். இலைகளின்
பச்சை உணர காய்ந்த சருகினை சேர்ப்பது
மிகப்பெரும் பிழை தான். இருந்தாலும்,
மொத்த உணர்வுகளையும் ஒரு குறுஞ்செய்தியில்
கடத்திய உன்னை எப்படி ஆறுதல் படுத்துவதென
தெரியவில்லை அன்பே!
பரப்பரப்பான இந்த வாழ்வில் ஒரே
ஒரு குறுஞ்செய்தியால்
மறித்துப் போனது போல் உணர்வது
மிகவும் புதிதுதான்!
நிகழ்வில் தொலைந்து இறந்தகால
இன்மையை உணர துடிப்பது
என்பது மிகவும் புதிர் தான்!!
எதுவும் செய்யாமல் இன்மையை
ஆற்ற உன்னை நினைத்தபடியே
அமர்ந்திருக்கும் இந்த நிமிடங்களை
கடப்பதும் மிக மிக கடினம் தான்!!!
இருந்தும், அதிகபட்சமாக என்னால்
சொல்லமுடிவது “மிஸ் யூ” மட்டுமே!