இப்பொழுதெல்லாம்
ஒரு தூறல் விழும்போதே
ஓடி ஒளிந்து விடுகிறேன்.
ஒரு பாதி நனைந்தால்
பெரும் பாதி கரைந்ததாய்
நம்ப தொடங்கிவிடுகிறேன்.
என்றோ உணர்ந்த குளிர்
இன்று இல்லை.
நன்றாய் அணைத்த உடலும்
அருகில் இல்லை.
சத்தமாக கொட்டி தீர்க்கும் மழையில்
விழுந்து தெரிக்கும் துளியை,
நிரம்பி வழியும் நீரை,
சில்லென வீசும் சாரலை,
செவி கிழிக்கும் இடியை,
கண் கூசும் மின்னலை
பார்த்தபடியே மௌனமாக
கடந்து விடுகிறேன்.
பெரிய வருத்தம் ஒன்றும் இல்லை.
ஆறுதலை சொற்களாக மட்டும்
தர நிபந்தனை ஏதும் இல்லை.
அடுத்த மழை காலத்திலாவது
வந்துவிடு அன்பே, குறைந்தபட்சம்
சேர்ந்து நனைவதற்காகவும்,
அதிகபட்சம் நினைவுகளை
சேர்ப்பதற்காகவும்.