எல்லா அன்பான சொற்களை தேடி சேர்த்து
மன்னிப்பு கடிதம் எழுதி தர நீங்கள் நேசித்தவர்
கட்டளையிட்டால் என்ன செய்வீர்கள்?
என்றைக்கும் இல்லாத ஒரு புது கவிஞன்
உங்களுள் உருவாகி விட்டது போல் உணர்வீர்கள்.
கைதேர்ந்த கவிஞர்களின் படைப்புகளின்
சாயலில் எழுத முற்பட்டு காகிதத்தை கிழித்து
வீசுவீர்கள்.
நேசித்தவரின் சாயலை, தர துடிக்கும் வெப்பத்தை எழுத்தில் பதிவு செய்ய சொற்கள் கிடைக்காமல் திண்டாடுவீர்கள். இருவரும் சிரித்து கழித்த நிகழ்வுகளை எழுத்தில் கொண்டு வர துடித்து அடங்குவீர்கள்.
எத்தனை கூட்டத்திற்கும் மத்தியிலும் அவர்களின் இன்மையை உனர்ந்து தொலைந்து போனதை உருவகமாக எழுத நினைத்து சலிப்பீர்கள். சட்டென பறந்த பூச்சிபோல சட்டென கிடைத்த வரிகளில் உங்கள் இருவரை பொருத்தி சிரிப்பீர்கள்.
அவர்களையே நினைத்து அமர்ந்து கழித்த
பொழுதுகளை என்னவென்று சொல்வீர்கள்.
இப்படி எல்லாம் செய்தும், அந்த நாளில்
அல்ல நாளின் முடிவில் எந்த கடிதமும்
எழுதி இருக்க மாட்டீர்கள்.
ஒரு வேலை கடிதம் கேட்டால், கடிந்து கொண்டால் எப்பொழுதும் போல புன்னகைப்பீர்கள் அல்ல எப்பொழுதும் போல முத்தமிட்டு சமாதானம் செய்ய நினைப்பீர்கள்.
இது எதுவுமே நடக்காத பட்சத்தில், நீங்களும்
புலம்ப துவங்குவீர்கள் பேரண்பு மிக்க இந்த மானுட வாழ்க்கை கொஞ்சம் புதிரானது தான் என்று!