இருள் வெளுத்திராத வானத்தின்
கீழ் படுத்திருந்தோம். நீயும் நானும்.
ஒருமுறை மேலும் கீழுமாக ஒருமுறை
முன்னும் பின்னுமாக ஒருமுறை
இடமும் வலமுமாக பின்னொரு முறை
எல்லாமுமாக என மென் உணர்வுகளால்
தூண்டப்பட்டு உடலோடு உடல்
பிணைந்திருந்தோம்.
கண் அருகினில் சிறு முத்தம்
கழுத்தருகினில் சிறு வாசம்
காதருகினில் சிறு ரகசியம் என
எல்லாம் சொல்லியும் இன்னும் கேட்டது
இருவர் இடையில் உள்ள நெருக்கம் கூட
கைபிடிப்பினில் ஓர் இறுக்கம்
உடல் தீண்டலில் ஓர் மயக்கம் என
எல்லாம் நீண்டும் இன்னும் வேண்டியது
ஆறிய வடுவை தடவியும், ஆறாத
வலிகளை செவியினில் புகுத்தியும்
உறவென்னும் மாயையை விளக்க
பொருளற்ற உரையாடலை துவங்கி
காதல் பற்றி, காமம் பற்றி, நமது
விருப்ப வெறுப்புகளை பற்றி பேசியபடியே
ஓர் பெரும் பசியோடு படுத்திருந்தோம்.
இருள் புலர புலர இதழ்களை சுவைத்தும்,
உடல் வியர்வையில் நனைந்தும்,
களைப்பினில் கண் அயர்ந்தும்
நான் உன் மார்பில் முகம் புதைத்தபடியும்
நீ என் தலை கோதியபடியும் ஏதேதோ
உலறலுக்கு பிறகு உறங்கிப் போயிருந்தோம்.
விடியலுக்கு பின் நான் இங்கும்
நீ அங்கும் தூக்கி வீசப்பட்டு ஏதேன்
தோட்டத்துக்கு அழைத்து வரப்பட்டதில்
பெரும் ஆச்சரியம் ஏதும் இல்லை நமக்கு.
நம்மை அழைத்து வந்த அந்த கடவுளும், சாத்தானும் எப்படியேனும் அடித்து சாகட்டும்.
பெரும் குரலில் கேட்ட கட்டளையை உடைத்து
தடைசெய்த கனியை புசித்து,
பெரும் உணர்வுகளை
இவ்வுலகினில் பரப்புவோம்.
பின்,
நாம் முதல் முறை முத்தமிட்டது போல
மீண்டும் முத்தமிட துவங்குவோம். வா!