புதிதாக அப்படி என்ன சொல்லி உனை
நான் தேற்றிவிடப்போகிறேன் அன்பே
நீயே சொல்.
இதற்கு முன்
உடைக்கப்பட்ட உன் மணக்கண்ணாடியை
நீயே தான் சரிசெய்து கொண்டாய்.
கட்டப்பட்ட கண் துணியை நீயே தான்
அவிழ்த்தெரிந்தாய்.
உயர பறந்து விழுந்த பின்னும் நீயே தான்
மீண்டும் தவழ்ந்து எழுந்து பறந்தாய்.
உனக்கு பிடித்த வலைவுகளில் நீயே தான்
திரும்பிக்கொண்டாய்.
பெரும் இழப்பிற்கு பிறகும் மெல்ல சிரிக்க
பழகிக்கொண்டாய்.
இத்தனைக்கு பிறகும்
இந்த புது மனச்சிக்கல்களுடன் இரெவெல்லாம்
விழித்திருக்கும் உன்னை அதிகபட்சமாக
என்னால் அணைத்துக்கொள்ள முடியும்.
ஒரு மெல்லிய குரலில் இது சரியாகிவிடும்
என ஆறுதல் பூக்களை உன் காயங்களின் மீது
நட்டு மீண்டும் உன்னை புண்படுத்த முடியும்.
அவ்வளவே!
உன்னை உன்னிடம் இருந்து மீட்டெடுக்கும்
வழி உனக்கும் தெரியும். மீள்வதற்கான பாதையில் உன் பின் நடந்துவர எனக்கும் தெரியும்.
காத்திருப்போம். அது அதன் போக்கில் நடக்கட்டும்.
அது அதன் போக்கில் சென்று சிறு அருவி பெரும் நீர்வீழ்ச்சி ஆவது போல!