அன்பே!
சில சமயம் நம் உரையாடலில்
ஓர் நீண்ட மௌனத்திற்கு பிறகு
“நாம் சந்திப்பது எப்போது?” என
இருவருமே கேட்டுக்கொள்கின்றோம்.
பின் இருவருமே “சீக்கிரம்!” என்கின்றோம்.
அந்த சீக்கிரத்திற்குள் எத்தனையோ பகல்
இரவு, மழை குளிர் நிமிடம் நேரம் மோகம்
தாபம் ஏக்கங்களுடன் சில நூறு மைல்களும்
பல லட்ச தயக்கங்களும் ஒளிந்திருக்கின்றன.
எந்த சீக்கிரமும் அத்தனை சீக்கிரமாக
நிகழ்ந்ததில்லை, அது காலமற்ற ஒரு
விண்வெளியில் பறந்து திரியும்
நோயுற்ற ஒரு பட்டாம்பூச்சி.
என்னேரமும் அது மடிந்து விழலாம்.
நாமும் உடல்களை பற்றிக்கொண்டு
மகிழ்ந்து சிரிக்கலாம், அதுவரை
நாம் சுவர் சூழ்ந்த அறையில்,
மிதமான நிலவொளியில், குளிர்ந்த காற்றில்
பரபரப்பான சாலையின் ஓரத்தில், தினமும்
உறங்கி எழும் நம் படுக்கையில் இருந்தபடியே
அந்த சீக்கிரத்தை எதிர்ப்பார்த்திருப்போம்.
சீக்கிரம் என்பது சீக்கிரம் முடிந்துவிட
வேண்டிய ஒரு நிகழ்வு தானே தவிர
வேறொன்றும் இல்லை!