குருதி

 எதிர்கொள்ளவே முடியாத நிகழ்வுகள் அத்தனை நுட்பமாக நிகழ்ந்துவிடுகிறது. அள்ளி முடிக்கப்படாத சிகையின் ஈரம் போல, மெதுமெதுவாய் வடிந்து உடலின் சொல்லப்படாத ஏதோ ஒரு பாகத்தை நனைப்பதை போல நனைத்துவிடுகிறது.

முதலும் இல்லாமல், முடிவும் இல்லாமல் மலையில், மழையில், மடியில் படுத்து தவழ்ந்து, சிரித்து, அழுது, நான் ரசித்த சில உருவங்களோடு என் முகம் பொருத்திப்பார்த்துக் கொள்ளும் இந்த திடுக்கிடும் எண்ணங்களை எழுத எந்த வார்த்தைகளும் கைவரவில்லை.

முழு அம்மனமாக குளியலறையில் நின்று எப்போதோ கிழித்த சதையின் வழிந்த குருதி வாசத்தை நினைவுபடுத்தி மெல்ல நுகராமல் இல்லை. எல்லாம் முடித்துக்கொள்ள எல்லா வழிகளும் இங்கே இருப்பதாக நம்பினாலும், எல்லாம் முடிந்துவிடுமா எனவும் தெரியவில்லை.

எப்போதும்போல மௌனமாக விசும்பிவிட்டு, சடாரென சாத்திய தாழில்லா கதவை திறந்து, விலக்கில்லா அறையின் நிலைக் கண்ணாடியின் முன் நீண்ட காத்திருப்புக்கு பிறகு, இறந்தவர்களின் குரல்களில் யாரோ அழைத்தது கேட்டது.

இதோ வருகிறேன் என்பதற்க்கும், வரமாட்டேன் என்பதற்க்கும் இடைப்பட்ட நேரத்திற்க்குள் வழிய ஆரம்பித்திருந்தது கலைத்துப்போட்ட உணர்வுகள் கலந்த இளஞ்சூடான குருதி.

0 thoughts on “குருதி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top