வா, தேனீர் அருந்த போகலாம்
மஞ்சள் வெயிலில் உரையாடலை
துவங்கி, நான் படித்த புத்தகம்
நீ பார்த்த சினிமா என பேசித்தீர்ப்போம்
பேச்சுகள் ஓய்ந்து மௌனம் சூழும்போது
மெல்ல காலார நடை போடுவோம்
எங்கோ பார்ப்பதை போல கண்களை
பார்த்துக் கொள்வோம், இருவரும்
பார்க்காத நேரம் பார்த்து நிசப்தமாக
சிரித்துக் கொள்வோம்
நம் தோல்கள் உராய்ந்தால்
கைகள் ஆடையின் மேல் பட்டால்
தள்ளி செல்வதை போல பாவனை
செய்வோம்
நடைபாதையில் யாரேனும் எதிரில்
வந்தால் எதேச்சையாக விரல்
பிடித்துக் கொள்வோம்
ஒருவேளை விரல் தொட்ட பிறகு
நெஞ்சு படபடக்க துவங்கினால்
எனக்கு பிடித்த கவிதையை நானும்
உனக்கு பிடித்த காட்சியை நீயும்
மனதிற்குள் நினைத்துக் கொள்வோம்
இருவரும் விடைபெறும் நேரம்
பெயர் தெரியா தவிப்புகள் கொதிக்க
துவங்கும்; இருவரும் திணறி திணறி
விடைபெறுகையில், சொற்கள்
அப்போது தான் துளிர் விட்டு செழிக்கும்
வழிநெடுக நம் இதழ்கள் எதையோ
சொல்ல மறந்ததை போல துடிதுடித்து
அடங்கும்;
என்றோ ஏங்கியதை போல அன்று
நம் காதல் கரையில் அலையடித்து
நுரை பொங்கும்; எப்போதும்போல நாம்
கடலை பார்த்தபடி நின்றுக்கொள்வோம்
அந்த உப்பான நீர் நம் வெடித்த பாதம்
தொட்டு நம்மையும் நனைக்கட்டும்
நம் பாவங்களை போக்கி; நம்
வலிகளையும் கழுவட்டும்
அக்கணம் நம் உயிர் சிலிர்த்தால்
உடல் வியர்த்தால், கட்டியணைத்து
காதலை சொல்லி மூச்சடக்கி
முத்தமிட்டுக்கொள்வோம்
காத்திருந்தே காலம் கழித்த நமக்கு
காதல் செய்ய மட்டும் தானே தெரியும்!
சரிதானே அன்பே?!
வா, காதலிப்போம்.