எங்கள் இருவரின் ஒரு நாள் என்பது
நடு இரவிலும், அதிகாலையிலும்,
சில நேரம் காலையிலும் முடிவடையும்.
அன்று அதிகாலைக்கும், புலர்ந்த
காலைக்கும் இடையில் இருவரும்
பரஸ்பரம் பகிர்ந்த “குட் நைட்” பிறகு
அந்த நாள் முடிந்து, அந்த கனவு
துவங்கியது.
அதில் கொஞ்சம் சிரித்தும்
மௌனமாக அமர்ந்தும்
படுக்கையில் விலகி படுத்தும்
ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ள
முடியாத பரிதவிப்பில் ஒருவரை
ஒருவர் பார்த்திருந்தோம்.
நம் உடல்களின் மனம் நுகர
இருவரும் அருகில் வந்ததும்
இருவரும் எரிய ஆரம்பித்திருந்த
பொழுதுதில் தான் தூக்கம் கலைந்து
உள்ளுக்குள் ஏதோ கனத்தது.
உன் நியாபகங்களை தவிர உன்
நினைவாக ஏதேனும் என்னிடம்
தந்துவிட்டு சென்றிருக்கலாம் நீ.
அது உன் ஆடையோ, எனக்கு பழக்கமான
உன் வாசனை திரவியமோ எதுவானாலும்
இருந்திருக்கலாம்.
அதிகபட்சமாக அந்த காலையில்
அதையாவது நுகர்ந்து நீ அருகில்
இருப்பதைப்போல கற்பனை செய்து
காற்றோடு முத்தம் வைத்திருப்பேன்.
இப்படி, நீர் நிறைந்த கண்களோடு
நாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை
பார்த்தபடி, உனை வந்து அடையும் வழியை
பதற்றத்துடன் சிந்தித்து தூக்கம்
தொலைந்து அமர்ந்திருந்திருக்க மாட்டேன்.
அன்பே! இதை வாசிக்கும் பொழுதில்
என்னைப்போலவே உனக்கும்
கண் கலங்கி தானே இருக்கிறது?