இப்படி கொந்தளித்து அடங்கி
மீண்டும் கொந்தளிக்கும் மனதிற்கு
என்ன தேவை என உங்களிடம்
சொல்ல எனக்கு விருப்பமில்லை.
அது, செந்நிற மாலை முடிவில்
இருள் கவ்வும் வேலையில்
கத்திரிப்பூ வண்ணம் தெளித்த
வானத்தின் அடியில் கிடைக்கும்
முத்தமாக இருக்கலாம்.
குளிரான அறையில், கெட்டியான
இருளில் நீர் வழிந்த கண்ணங்களை
துடைக்கும் கரங்களின்
வெப்பமாக இருக்கலாம்.
யாரோ சொன்ன பொய்களை
நம்பி, கண்ணாடி முன் நின்று
சுய நிர்வாணத்தின் அங்கங்களை
ரசிக்கும் கண்களாகவும் இருக்கலாம்.
உச்சி வெயிலில், வாகன நெரிசலில்
வியர்வை கலந்த உடற்வாசனையை
நுகர்ந்து உள்ளுக்குள் சேர்த்து
வைத்துக்கொள்ளும்
பேராசையாய் இருக்கலாம்.
இரைச்சலான பேருந்துகளின்
ஜன்னல் காற்றுக்கு சாய்ந்து
உரங்க துடிக்கும் தலையை
தாங்கும் தோல் பட்டையாக இருக்கலாம்.
சுட்ட சோளத்தை மென்றபடி கடற்காற்றில்
கைகோர்த்து புரிந்த கதைகளும்,
புரியாத உணர்ச்சிகளும் சொல்லிவிட
சொற்களை தேடி சலித்து தொலைந்து
போனதாய் இருக்கலாம்.
ஈர உடலில் ஆடை ஒட்டி மழைக்கு
ஒதுங்கி நின்று அணைக்கவும்
இல்லாமல், அழைக்கவும் இல்லாமல்
தயக்கங்களோடு நிற்கும் மௌனமாகவும்
இருக்கலாம்.
மறைத்து எடுத்து வந்த நேசித்தவரின்
புகைப்படத்தை தடவி பார்த்து
காற்றில் முத்தமிட்டு புன்னகைக்கும்
உதடுகளாக இருக்கலாம்.
உச்ச போதையில் காதலித்தவரின்
பெயரை கத்தி சொல்லி, எதோ ஒர்
கவிதையில் கரைந்துப்போனதாக
இருக்கலாம்.
அல்ல, பீடியின் கடைசி இழுப்புக்கு
சுட்டுக்கொண்ட காய்ந்த உதட்டில்
எதிர்பாராமல் தந்த எச்சில் என
எனது தேவை எதுவானாலும்
இருக்கலாம். எதையும் உங்களிடம்
சொல்ல எனக்கு விருப்பமே இல்லை!