வழக்கம்போல தான். ஆனால்
இம்முறை வந்த கனவில்
நான் யாரோ ஒருவருடனும்
நீ யாரோ ஒருவருடனும்
எதிரெதிர் நின்றிருந்தோம்.
உனக்கும் எனக்கும் பக்கத்திலிருந்த
அந்த யாரோ ஒருவரின் முகம் எனக்கு
நினைவில் இல்லை.
அப்பொழுது வெகு நேரமாய்
நான் உன்னை பார்ப்பது போலவே
நீ என்னை பார்த்திருந்தாய். உன்
அருகில் நெருங்கி வருவதற்குள்
அன்றைய அந்தி சாய்ந்துவிட்டது.
முதன்முறையாக நம் விரல்கள்
பிணையாமல் அதன் போக்கில்
எதையோ தேடியபடியே இருந்தது.
விடைபெறும் நேரம் வந்ததும்
நீ அந்த யாரோ ஒருவரின் கையை
இறுக பிடித்தபோது தான் விழிப்பு
வந்தது.
இந்த அதிகாலையில் உன்னிடம்
கேட்பதுபோல என்னிடம்
கேட்டுக்கொள்வது ஒன்று தான்;
அன்பே முன்னொரு பொழுதில் நான்
கடத்திய உணர்வுகளை உன் விரல்களினுள்
நீ பத்திரமாய் வைத்திருக்கிறாய் தானே?