ஒரே வழியில் பயணிக்க கூடிய
ரயிலை தவறவிட்ட குழந்தைகள் நாம்.
வெவ்வேறு இருக்கைகளில் அமர்ந்திருந்த நாம்
அருகில் வருவதற்குள் ஏதேதோ நடந்துவிட்டிருந்தது.
நான் உன்னையோ, நீ என்னையோ இனி
சந்தித்துக் கொள்ளும் தருணம் எப்போதென
தெரியவில்லை.
இத்தனை தூரத்திற்கு அப்பால் நம் விரல்கள்
எத்தனை எதிர்பார்ப்பில் எத்தனை தனிமையில்
இருக்கிறதென இருவரும் அறிந்திராமல் இல்லை.
இத்தனை நினைவுகளுக்கும் மத்தியிலும், உன்
அண்மையை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும்
ஆசைக்கு மத்தியிலும், எப்போதோ பூத்திருந்த பூ இப்பொழுது வாசம் வீசி கண்ணீரை தராமல் இல்லை.
நேசிக்கும் எல்லா ஆன்மாக்களை போல, எல்லாம் கொடுத்துவிட துடித்தும் என்னிடம் எஞ்சியிருப்பது என்னவோ, விளக்க முடியாத உணர்ச்சிகளும் ஆறுதல் அளிக்க சிறு சொற்களும், சில பாடல்களின் முனுமுனுப்புகளும், காற்றை துழாவும் கைகளும், உனக்காக உதட்டில் சேர்த்து வைத்த ஓராயிரம் முத்தங்களும் தானே தவிர வேறெதுவும் இல்லை அன்பே!