இத்தனை அகலமாக
விரிந்ததில்லை என் கண்கள்.
இத்தனை அழகாக
சிவந்ததில்லை என் கண்ணங்கள்.
இப்படி புதிதாக சிரித்து
வலித்ததில்லை என் உதடுகள்.
இப்படி புதிரான உணர்வுகளோடு
நகர்ந்ததில்லை என் நாட்கள்.
நிமிடங்கள் நொடிகள் ஆகிவிட்டதாய்
நம்ப துவங்கினேன்.
கடிதங்கள் உன்னிடம் வந்து சேருமென
எழுதி பழகினேன்.
எல்லோரும் அனுபவிக்கும் உணர்வு தானா இது.
எனை நான் உணர்ந்த தருணம் அது. பாரங்களின் கனமும் அவிழ துவங்கியது.
சிறு துளியான அன்பு பெரும் கடலாய்
உயிரினுள் நிறைந்து வழிந்தது.
என்றைக்கும் இல்லாமல் இதுவும் பிடித்து போனது. விரலோடு விரல் பிணைக்க ஏதோ தவித்து மறைத்தது. சட்டென முடிந்திட கூடாதென ஏக்கமும் பிறந்தது. கனவுகளில் காத்திருந்து விழித்ததும் மறந்தது.
இது எல்லாமே இயல்பென்றால், ஒரு கோடையில் வீசும் சிறு சாறல் என்றால், உனை காணும் போதெல்லாம் ஏன் தலை அறுத்த கோழிபோல் இப்படி துடிக்கிறது இந்த உடல், எதையும் சொல்லாமல் ஏன் இப்படி கணக்கிறது என் சொற்கள்.
எந்த விளக்கங்களும் யாரிடமிருந்தும் வேண்டாம். இருவரும் தெரிந்தே நீந்தி பழகும் இந்த உறவின் பெயர் யாருக்கும் தெரியாமலே தான் இருந்துவிட்டு போகட்டுமே!
தெரிந்து, அப்படி என்ன ஆகிவிடப்போகிறது?