எழுதி தந்த கடிதத்தை எழுத்துக்கூட்டி
வாசிக்க ஆரம்பித்திருந்தாள் அவள்.
கவனிக்க மறந்த சிலதை,
கடந்து போன சிலதை,
கண்டு ரசித்த சிலதை,
கழித்த நிமிடங்கள் சிலதை,
சிறு கடிதமாய், சிறு கவிதையாய்
வாசித்ததில், ஒளித்து வைத்த
உணர்ச்சிகளோடு எல்லாமும் இருந்தது.
எல்லாம் சொல்லிவிட்டதை போல் நானும்
எல்லாம் கேட்டுவிட்டதை போல் அவளும்
காட்டு பூக்களின் மகரந்தத்தோடு சண்டையிடும்
வண்டுகள் போல திக்கி திணறி பேச
சொற்கள் இல்லாமல் புன்னகைத்தபடி
ஒருவரை ஒருவர் பார்த்திருந்தோம்.
இருவருக்குமே தெரிந்திருந்தது
கரையில்லா கடலில், துடுப்பில்லா
ஒரு படகில் லாவகமாய் பிடித்த திசை
நோக்கி பயணிக்க.
எந்த கேள்விகளும் வேண்டாம்
எந்த எதிர்வினையும் வேண்டாம்
இருவரின் சந்திப்பில்
இதழ் பேசாததை, கண் பேசும்போது
உணர்வுகளால் பிணைந்த உடலை
மொத்தமாய் அள்ளி அணைத்துக் கொள்வோம்.
அந்த கடிதம் போல, கவிதை போல
உன்னையும் என்னையும் போல
அந்த ஒரு நொடியில் அந்த ஒரு தருணம்
அழகாகி போகட்டுமே!
அதுவரை எப்போதும் போல,
உயிரினுள் சிறகடிக்கும்
பட்டாம்பூச்சிகளை
பரிசளித்துக் கொள்வோம்
வா!!