உங்கள் இருவருக்கும் இடையில்
இதற்கு முன் நிகழ்ந்த எந்த
உரையாடல்களும் அத்தனை
அழுத்தமாக இருந்ததில்லை.
ஏதோ முடிந்துவிட்டது போல,
எல்லாம் புரிந்துவிட்டது போல,
ஒருவரை ஒருவர் பார்த்தபடி,
இன்மையை உணர்ந்தபடி
நீர் நிறைந்த கண்களோடு
மௌனமாக அமர்ந்திருந்தீர்கள்.
நீங்கள் அப்பொழுதே சொல்ல
வந்ததை சொல்லி இருக்கலாம்.
சொல்லியிருந்தால், பெயரில்லா
அந்த உறவின் தேவையை உங்கள்
இருவருக்கும் அந்நொடி
உணர்த்தி இருக்கலாம்.
இருளோடு விழித்திருப்பது
ஒன்றும் உங்களுக்கு
புதிதில்லை தான்.
ஆனாலும், அத்தருணத்தில்
முன்பு இருந்ததைவிட நீங்கள்
அவர்களை அதிகமாக நேசிக்க
துவங்கி இருந்தீர்கள்.
பெரும் ஒரு கதறலுக்கு பிறகு
ஒரு மழையின் முடிவில் தெரியும்
வானவில்லின் வசீகரம்
எத்தனை நேரம் நீளுமென
நினைத்தபடியே
உறங்கிப் போனீர்கள்.
அன்றைய கனவில்
வழக்கத்திற்கு மாறாக,
முதன்முறையாக இருவரும்
முத்தமிட்டு கொண்டது என்பது
நினைவுகளில் நிரம்பியிருந்த
ஒரு பெரும் நிகழ்வு தானே தவிர
வேறொன்றும் இல்லை!