இப்பொழுதெல்லாம் ஒரு நாள்
என்பது மழை வரும் அறிகுறிகளோடே
துவங்கி நீள்கிறது.
எனது மாலை என்பது உனது மாலை போல
சட்டென முடிந்து இருள் துவங்கிவிடுகிறது.
நமது ஒவ்வொரு இரவும் முந்தைய
இரவை போல இருப்பதில்லை அன்பே.
முன்பு இருந்ததைவிட
பேச்சுகள் குறைந்து உணர்ச்சிகள்
பெருகிக்கொண்டே இருக்கின்றது.
நேற்றுக்கு இன்று குளிர் ஒவ்வொரு
புல்லிகளாக அதிகமாகிக்கொண்டே
போகின்றது.
நம் இரு உடல்களும் தனித்தனியே
இந்த குளிரில் சுருண்டு படுத்து
உறங்குகிறது.
இந்த தூரங்களில் வரும்
சிறு சில பினக்குகளை
இப்போதைக்கு ஒத்திவைத்து
கொள்வோம்.
இந்த குளிர் காலம் தீரும் வரை
எனக்கும் நீயும், உனக்கு நானும்
தேவைப்படுவோம்.
குளிர்கால மலர்கள் தொடுதலில்
கொஞ்சம் மலர்வதில் பிழை ஒன்றும்
இல்லை தானே!