ஏதேதோ காரணம் சொல்லி விலகி
இருந்தவர்கள் தான் நாம்.
இப்பொழுது, ஏதேதோ காரணம் சொல்லி
இணைய துடிக்கின்றோம்.
அதிகாலையில் அந்திப்பொழுதுகளில்
வெற்று உரையாடல்கள் அவசிய
தேவையாக மாறியிருந்தது.
கொஞ்சம் மறைத்தும் கொஞ்சம் தவித்தும்
நம்முள் சேர்ந்த ஆசைகள், மள மளவென
வளர ஆரம்பித்தது.
முன்பு தொடுதலின் வழியே காதலை
உணர்ந்த நாம். இன்று பிரிவின் கசப்பான
கண்ணீரில், யாருமற்ற அறையின்
தனிமையில்,
முடிந்த நிகழ்வுகளின் சுமையில்
ஏக்கத்தின் சூட்டில் மலரவிருக்கும்
சொற்களின் வழியே உணர துடித்தோம்.
முத்தத்தின் சுவையை, ஈரத்தை
வெப்பத்தை உணர எதையோ நினைத்து
எதற்கோ சிரித்து இரவெல்லாம்
தூக்கமில்லாமல் புரண்டு தவித்தோம்.
புது விதமான உணர்வுகளை கைகளின்
விரலுடுக்கில் கடத்திவிட அத்தனை
ஆவல் கொண்டோம்.
நாம் மௌனமாய் மீண்டும் அமர
எந்த கடலும், அலையும், கரையும்
நம் எதிரில் இல்லை. ஒரு சாக்கில்
சாய்ந்துக்கொள்ள எந்த
சாலை திருப்பங்களிலும் நம் முன்
வரப்போவது இல்லை.
நாம் சுதாரிப்பதற்குள் எல்லாமே
நிகழுந்துவிட்டது, நாம் பிரிந்திருக்கும்
இந்த தூரத்தை எந்த சாலையும் இணைக்க
இயலாது. ஏனோ, நாம் ஒருவரை ஒருவர்
அதீதமாக நேசிக்கின்றோம் என்பது
இப்பொழுது தானே தெரியவே வருகிறது!
சந்தர்ப்பம் அமைந்தால், சூழ்நிலை
இணைந்தால் சந்தித்துக் கொள்ளும்போது
முதலில் நம் காதலை சொல்லிக்கொள்வோம்!!
பிற்பாடு, இன்மையில் சேர்த்த கண்ணீரை
அணைத்தோ, முத்தமிட்டோ பகிர்ந்துக்
கொள்ளலாம்.
முழுதாக கரைந்து போகும் முன் உடைதல்
இருவருக்கும் அவசியம் தானே!!