இக்கரையில் நான் உன்னையும் அக்கரையில்
நீ என்னையும் நினைத்தபடியே
நின்றிருக்கின்றோம்.
சிறு அலை சிறு மேகம் சிறு காற்றுக்கு பிறகு
இருவரின் இன்மையை இருவரும் உணர
ஆரம்பித்திருந்தோம்.
இருவரும் எதிர்ப்பார்திராத தூரத்தில்
இருந்தபடியே இருவரும் இருவரை
எதிர்ப்பார்த்திருந்தோம்.
நடு இரவு பிதற்றல்களும் அதிகாலை
ஏக்கங்களும் முடியாத கனவுகளும்
உள்ளுக்குள் புதிதாய் ஏதோ
செய்ய துவங்கியிருந்தது.
நீ, அத்தனை கவலைகொள்ள
தேவையில்லை அன்பே!
நம் இருவரையும் தூரமாக்குவது
ஒரு கடலும், சில மலையும்
பல நதியும், சில தயக்கங்களும்
மட்டும் தான்.
எப்படியும் அதை கடந்துவிடலாம்!
எதிர்பாராத ஒரு அதிகாலையில் நாம்
இருவரும் சந்திக்கும்போது. பெரும் மழை
புது குளிர் கதைகளோடு கடந்து வந்த
கடல் மலை நதியை பற்றியும்
முத்தமிட்டபடியே உனக்கு
நான் சொல்வேன்.
அதுவரை காத்திருப்போம்!
எப்பொழுதும் போல
தலையணையை
இறுக அணைத்தபடியே!