எழுதி மறைத்த கடிதம்; 1


அன்பே!

எனக்கு எல்லாம் நேற்று நடந்ததை போலவே இருக்கின்றன. நாம் நடந்து திரிந்தது, சேர்ந்து சிரித்தது, சொற்களால் இணைந்து, இந்த உறவு தொடங்கும் முன்பே இருவரும் பிரிந்தது என எல்லாமும் தான். நான் சொல்ல தயங்கும் உணர்வுகள் உன்னுள் வந்தும் மறையலாம் அல்ல வராமலும் உதிரலாம். யாருக்கு தெரியும்?

ஆனால், நான் எப்பொழுதும்போல என் கனவுகளில் உன்னை அருகிலிருக்க வைப்பேன். நான் தனிமையில் கடற்கரையில் அமரும் முன் உனக்கென ஓர் இடம் பிடிப்பேன். தெரு வழியில் பூ தென்பட்டால் அதை பறித்து உனக்கென சொல்லிக்கொள்வேன். சாலை வளைவுகளில் திரும்பும் முன் கண்ணாடியில் உன் முகம் தெரிகிறதா எனவும் பார்ப்பேன். உன்னை உணர உனக்கு பிடித்த பாடலை திரும்ப திரும்ப ஒலிக்க செய்வேன்.

சிறு மழையில் குளிரில் உன் மார்பு சூட்டை உணர துடிப்பேன். கண்களை மூடி முத்தமிடுவதை போல நினைத்து சிரித்துக் கொள்வேன். நடு இரவில் உன் நிர்வாணத்தை தழுவ என் அங்கங்களை தொட்டு ஆசுவாசம் அடைந்துக்கொள்வேன். உன் உடலின் வாசம் நுகர நான் திருடிய உன் ஆடையை ரகசியமாக நுகர்ந்து புன்னகைப்பேன்.




ஏதோ ஒரு கவிதை படித்து அதன் சாயலிலே உனக்கு ஒரு கடிதம் எழுதி கிழிப்பேன். உச்ச போதையில் நான் பாடும் பாடலின் நடுவில் உன் பெயர் உச்சரித்து மகிழ்வேன். அன்பே, இப்படி இப்படியென ஏதோ ஒரு கட்டத்தில் நான் என்னை முழுதும் மறந்து பித்தனும் ஆவேன்.

மஞ்சள் பூக்கள் போல உன் மீது பொழியப்படும் அன்புகளுக்கு மத்தியில் நான் தரும் சிறிய அல்லியையும் கண்டெடுத்துக்கொள். மாறாக நீ பெரும் காதலை திருப்பி தர எந்த நிர்பந்தமோ அவசியமோ இல்லை. ஒருவேலை திருப்பி தர நினைத்தால், என் காதல் நிச்சயமாக உன்னை வதைக்கும், உன் சமநிலையை தடுமாற வைக்கும், கனவுகளுக்கும் நினைவுகளுக்கும் மத்தியில் சிக்கி தொலைந்து போய்விட சொல்லும்.

என் ப்ரியம் உன்னை அச்சமடைய வைத்து சிறு நெருக்கடிக்கு தள்ளும். உன்னை உனக்கு அதிகம் பிடிக்க வைக்கும். வெண் சிறகு இருப்பதாக கற்பனை செய்ய வைக்கும். நேரம் காலம் மறந்து சிந்தனையில் நீச்சல் அடிக்கும். அகச்சிறையில் உன்னை தள்ளி இந்த தண்டனை தேவையா என குழப்பி எடுக்கும்.

நான் உன்னிடம் வரும்வரை நீ அப்படியே இரு போதும். எத்தனை அவஸ்தையிலும் உன்னை மட்டுமே காதல் செய்வேன், காதல் செய்தபடியே இருப்பேன். இன்று போலவே என்றும். நீ மிரளாதே இந்த அன்பின் கனம் தாங்காமல் நானே எனக்குள் மருண்டு உடைந்து சீர்பட்டுக்கொள்வேன். அது தானே காதலின் நியதி. 

நாம் அடுத்து சந்திக்கும்வரை நம் நினைவுகளோடு இந்த முத்தத்தையும் நியாபகமாக வைத்துக்கொள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே!

12:23

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top