எல்லா பக்கமும் அடிக்கும்
மழைச்சாரலுக்கு எந்த பக்கம்
குடை விரிப்பதென தெரியவில்லை
எல்லா பக்கங்களிலும் விழும்
மழைத்துளியை எந்த பக்கத்தில் எண்ண
ஆரம்பித்தாலும் முடிக்க முடியவில்லை
சாலையோரம் தேங்கிய மழைநீரில்
குதித்தப்பின் எழுந்து வரவும்
விருப்பமில்லை
உன் பின் அமர்ந்து ஒன்றாக நனைந்த
மழையின் ஈரம் நெஞ்சோடு இன்னும்
உலர்ந்தபாடில்லை
இன்னும் ஆயிரம் “இல்லை” களை
எப்படி கையாண்டு கடப்பதென
தெரியாமல் மேக மூட்டைகள் போல
என்னுள் குவித்து வைத்திருக்கின்றேன்.
இதுபோதாதென இன்னமும் நீ
ஒரே பார்வையில் உன்னை
மொத்தமாக கடத்திவிட ஏதேதோ
செய்துக்கொண்டிருக்கின்றாய்
என் மேல் விழும் மொத்த
மழைநீரையும் ஒழுகும் ஒற்றை
பாத்திரத்தில் எப்படி நான் அள்ளி
உற்றி நிரப்புவது என எந்த
யோசனையும் இதுவரை வந்தபாடில்லை
ஒரு துளியில் துவங்கி பெரும்
மழையாவதை போல நீ உன்னை கொஞ்சம்
கொஞ்சமாகவே என்னிடம் தா அன்பே,
பின் ஏதேனும் மிச்சம் இருந்தால் பிற்பாடு
பார்த்துக் கொள்ளலாம்
எந்த அவசரமும் இல்லாமல் உன்போல்
நானும் முழுதாக நனைந்ததாய் உணர
கொஞ்சம் கால அவகாசம் கொடு அன்பே.
இப்போதைக்கு அது போதும்!