அன்புகளின் சர்க்கரை

இறந்தவறின் கடிதங்களை
நீங்கள் என்றாவது படித்ததுண்டா?
எழுத்துகளின் எடை தாங்காமல்
வெடித்து அழுததுண்டா?
சில்லிட்ட கைகளில் கிடைத்த கசங்கிய
பேப்பரில் உங்கள் பெயரை கண்டு
திணறியதுண்டா?
அடித்து எழுதிய சொற்களை நினைத்து
தூக்கம் தொலைந்ததுண்டா? 
அலமாரியில், டைரியில், துணுக்கு சீட்டில்,
கிறுக்கிய பக்கங்களில் இறந்தவரின்
ஆசை இருக்குமென தேடி களைத்துண்டா? 
நண்பகலில், நடுஇரவில், சிறு உறக்கத்தில்
இறந்தவரின் முகம் கண்டு பதறி எழுந்ததுண்டா?
இறந்தவர் அருகில் இருப்பதாய், கனவில்
வருவதாய், ஏதோ சொல்ல நினைப்பதாய்
கண் மூடி படுக்கையில் கிடந்ததுண்டா?
திடீரென ஆசைகள் இரட்டிப்பு ஆனதாய், 
இறந்தவரின் கனவுகளும் உங்களுடன்
ஒன்றுசேர்ந்ததாய் கற்பனை செய்ததுண்டா?
பசி, தாகமென எதுவும் இல்லாமல் காய்ந்த
உதடுகளோடு திரிந்ததுண்டா?
சில நாளில், சில பொழுதில் இறந்தோரின்
இன்மையை உணர்ந்ததுண்டா? 
தினசரி நிகழ்வுகளில் ஆர்வம் இல்லாமல்
மௌனமாய் நடந்ததுண்டா?
சொல்ல துடித்ததை சொல்ல ஆளில்லாமல்
சொல்லிலே தனிமையில் கரைந்ததுண்டா?
இறந்தவரின் வலி உணர, யாருமில்லா
ஒரு பொழுதில், தூக்கு கயிற்றை
அளந்ததுண்டா?
இது அத்தனைக்கும் பிறகு இந்த
சுவாரசியற்ற வாழ்க்கையின் எதோ
ஒரு நாளில், ஏதோ ஒரு கை, அல்ல
ஏதோ ஒரு உடல்  எந்த அனுமதியுமின்றி
நம்மை அணைத்துக் கொண்டால், 
இறுக பற்றிக்கொள்வோம்.
இறந்தவரின் எந்த சாயலையும் அவர்களிடம்
தேடாமல், இலகுவான மனதை இறுக்கமாக்காமல்
அவர்களோடு சேர்ந்து பூக்களின் மேல்
நடை பயில்வோம்.
சுயம் மறப்போம், சிறகடிப்போம்.
அன்புகளின் சர்க்கரையை சுமக்கும் எறும்புகளாவோம்.
மொத்தத்தில் புதிதாக வாழத்துவங்குவோம்.
எல்லா முடிவுகளும், எல்லா துவக்கங்களும்
எல்லா ஓட்டங்களும் இந்த ஒரு துளி
அன்பிற்காக தானே. 
வா! கொஞ்சம் அன்பு செய்வோம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top