அதெப்படி உன் நீண்ட கால
ரணம் ஆற துவங்கியது?
அதெப்படி உன் வாழ்வில்
புகார்களே இல்லாமல் ஆனது?
அதெப்படி உன் வானம் மட்டும்
சிவந்திருக்கின்றது?
அதெப்படி உன் உலகில் மழையும்
வெயிலும், குளிரும் சமமாக
வந்து போகின்றது?
அதெப்படி உன் இரவு நீளாமல்
சட்டென புலர தொடங்குகிறது?
அதெப்படி உன் கனவில் ஒரே
உடல் உன்னை மீண்டும் மீண்டும்
தீண்டுகின்றது?
அதெப்படி உன் கண்கள் எதையோ
தேடியபடியே அலைகின்றது?
அதெப்படி உன் இதழ்கள்
அத்தனை மிருதுவாக புன்னகைக்கிறது?
அதெப்படி? அதெப்படி??
என தன்னிச்சையாக மலர்ந்த பூ, இத்தனை
வசிகரமானது எப்படி என யார்யாரோ ஏதேதோ
கேள்விகளை வீசுகின்றனர்.
எல்லாவற்றையும் எல்லா சொற்களையும் வைத்து எப்படி நிரப்பி விடுவது
என தெரியவில்லை!
அதற்கு விளக்கமளிக்க எது எதையோ பிதற்றுகிறோம்,
அது இதுவென குழப்புகிறோம்
ஏதோ சிறு பொய்களை பூசி
மழுப்புகின்றோம்.
எது எப்படியோ! நாம் செலுத்தும் அன்பும், நம் மீது செலுத்தப்படும் அன்பும் இந்த வாழ்வை அத்தனை அழகாக்கின்றது.
நிலவில்லா இரவுகளில் சிந்திய கண்ணீரும், தாபம் தகித்து தலையணையிடம் ஒப்புவித்த ரகசியமும்,
கடிகார முட்களோடு சுழலும் ஆசைகளும் உள்ளுக்குள்ளே பொசுங்காமல் இன்னொரு உயிரிடம், உடலிடம் பகிர்ந்துக் கொள்ள அத்தனை ஏக்கங்களோடு துடிக்க ஆரம்பித்தது.
முன்னெப்போதும் நாம் பொருட்படுத்தியதில்லை தான், இந்த உடலுள் ஒளிந்துள்ள உணர்ச்சிகளை, மோகங்களை, ஒளித்து வைத்த பெயரில்லா சிலதுகளை.
எல்லாம் தந்துவிட, எல்லாம் கேட்டுவிட சரணடையவும் தயார் தான், இருந்தும் சிறு தயக்கங்களோடும், சிறு கேள்விகளோடும், சில சமயம் வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்ளும் அந்தரங்க விருப்பங்களோடும், கனவுகளோடும், காத்திருப்பகளோடும், இருவரும் தூரம்
விலகி இருப்பது இணைவதற்காக தானே!
ஏதோ பாடலின் வரிகளில் வருவதைப்போல
இந்த காதல் சிறு வலியுள்ள ஓர் பெரும் சுகம் தான்!